Thursday, November 21, 2024

ஆசுகவி - பகுதி 10

  ஆசுகவி - பகுதி 10  ::


1201. ஸாலோக ஸாமீப்ய ஸாரூப ஸயுஜ்ய ஸம்போதனம்
ஸ்வஸதிக் இலக்கம் ::

தன்னுலகில்  தன்னருகில் தன்னுருவில் எண்குணத்
தன்மை யுடன்தன்னைப் போல்போகம் — தன்னையும்
நீடுவனாய் அன்னமென நம்பருகி ஈட்டவாம்
இன்பம் சுவாஸ்திக் குறி். 

1202. பஞ்ச மஹா யக்ஞம் :: 
தேவர் முனிவர் விருந்துபசு பட்சி
இவையோடு தம்முடைத் தெய்வம் — உவப்ப
உணவளித்து உண்டி புசிப்பார் இல்லறத்தைப்
பேணி இருப்பார் கடன். 

1203. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்த அண்ணல்  ::
கஞ்சனைக் காய்ந்து கடும்சொல் சிசுபாலன்  
வெஞ்சின தந்தவக்ரன் என்னிவர் -- துஞ்ச 
படைதொட்டு பாரத யாதவ சேனை
துடைத்திட்ட கண்ணன் கலி.

1204. விசித்ரா தேக ஸம்பத்தி ஈஸவராய நிவேதிதும்
பூர்வமேவ கிருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா  ::

நின்று நடந்து  கிடந்து  தொழுதராய்  
சென்று இருக்க விழைவார்க்கு  -- என்றுமாம் 
வேங்கடம் யாதவாத்ரி கச்சி வதரியோங்கு 
காருட வெற்பென்  இவை.  

1205. போக்தா போக்யம் ப்ரேரிதாரம் ச மத்வா 
ஸர்வம் ப்ரோக்தம்  த்ரிவிதம் ப்ரஹ்மமேதது||

தத்துவங்கள் மூன்றுமாம் நித்தியம் என்பது 
ஓத்து. உலகில் உடலழிவ -- தத்தாலே
நித்தியம் என்பதெத் தாலோதான்? சூட்சும
மத்தோடே ஒட்டழியா தால்! 

1206. த்ரைகுண்ய விஷியா வேத: 
நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன (கீதை-2.45)
(சாஸ்திரம் Vs சாஸ்திர சாரம் ) 
(பேசி வரம்பறுத்தான் முன் VS பேசி வரம்பறுத்தார் பின்) 
பூவையர் பெண்டிர் சதுர்த்தர் எனவாம்
இவர்கள் விலக்காய் முக்குணத்த — யாவர்க்கும்
ஓதல் அரிதாம் மறைநாலுள் எட்டெழுத்துக்
காத வரம்பருத்தான் முன். 
1207. சாஸ்த்திர ஞானம் பஹுக்லேசம் ::

ஆற்ற அரிதாம் நரஜென்மம் பெற்றாலும் 
நோற்றுவான் ஏறவற்றாம் புண்யபூமி -- உற்றாலும் 
கற்றுத்  தெளிய கலைகள் பதிநாலும் 
ஆற்ற எளிதோ பிறப்பு? 

1208. கர்ம-அபூர்வம் Vs 
பலபிரத்தவம் ஈஸ்வராதீனம் ::

கருமம் அநித்தியம், அஃதால் விளையும் 
பெரும்பாப புண்ணியம் மாயோன் -- கருத்தில் 
இருந்து சுவர்க நரகில் உழற்றல்  
வருந்தி ஞானவழி நாடு. 

1209. இவன்தான் இவைதன்னை நேராக விட்டிலன் ::
ஸாதன புத்தி கழிந்தவாரே 
கர்மம் கைங்கர்யத்தில் புகும். 
ஜ்ஞானம் ஸ்வரூப பிரகாசத்திலே புகும்.

பிணிபசி மூப்பிறப்பு காமம் வெகுளி 
அணிமென்  குழலார் உறவுசுற்றம் -  நாணி 
கருமத் தியைந்தநல் ஞான சமுச்சய 
ஆறது அணைவிக்கும் வீடு. 

1210. ஶ்ரீரங்க ஹர்ம்யதல தீபரேகாம்
புருஷம் கரோதி இதி புருஷகார :

தன்னைதான் காட்டி அருளை அடியார்க்கு
முன்னம்தான் ஈட்டுவான் குந்துகுறை — தன்னையும்
காணாக்கண் இட்டு நிறைவிளக் கென்னலாய்
பேணுமாணா மாற்றுவாள் மால்!

1211. தத் சேஷத்வம் ததீய சேஷத்வ பர்யந்தம் சென்றல்லது நில்லாது ::

கால்கணை ஆழி கடித்த மிடுக்கினார்
மால்அணைந்த அன்பினார் ஆகி — 
அடியார்சீர்
நெஞ்சில் மேவ மடிபிடித்துக் கோலிலும் 
எஞ்சாமை ஆழ்வார் இயல்பு. 

1212. பசுர் மனுஷ்ய பக்ஷிவா யேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா  : 
தேனைவ தே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோர் பரமம் பதம் .
--சாண்டில்ய ஸ்ம்ருதி.
(பகவத் பாத ரஜஸ் பட்டு கல் பெண்ணாக்கில் 
பாகவத பாத ரேணு பட்டு புல் மோக்கம் ஏகாதோ?)

இவைஅல்ல நல்ல இவையாமே தீய 
இவைவல்ல யான்தீமைக் கண்ணாக -- மேவல் 
அகல்வித்து புல்பூண்டாய் போக்கிலும் ஏகுவான்செய்    
நும்மடியார்  கால்துவைப் புண்டு. 

1213. சேஷத்வ பாரதந்திரிய சேஷத்வ யாதாத்மியத்துக்கு மூவர் போல் 
வாத்சல்ய ஸ்வார்த்த சௌஹார்தத்துக்கு மூவர் :

உலகத்து எவ்வுயிர்க்கும் முக்குணம் தொக்கித் 
துலங்கல் இயற்கை எனவாய் -- இலங்கிடும் 
மூவரவர் பெற்றதாய் உற்றத்தாய் மற்றுத்தாய் 
மேவன்பு ஆசை அருள்!

1214. ஸ்ருதி சிர சித்தம் ஸாது வித்யா தசமிதம் ::
(பதிற்று இப்பத்து) 

(1) மது வித்யா ::

அந்தரத்து தூங்கு சுதைத்தேன் கோல்போல
இந்திர லோக கழியதுமேல் — வந்துசெல்
சூரியர் மத்தியில் காண்வமுத பிந்துவாம்
நாரணனை நெஞ்சே நினை!

(2) நியாச வித்தை ::

மார்வமோர் வேள்வித் தலமாக ஆர்வம்
எரிதுரும் பாக இதயம்அன் -- நேர்யூப
தம்பமாக தாம்தம் வெகுளி அவிசாநம்
நாரணனை தாள்பிடிப்பார் நோன்பு.

முயற்சி திருவினை ஆக்கும் மனம்மொழி
ஆயமெய் மூன்றும் இயைந்துசெய் — தூய
செயல்அறிவு பக்தி வழியின் பிரபத்தி
ஆயாச மில்வான் நெறி.

(3) ஸத் வித்யா ::

(ஸ்வேதகேதுவுக்கு உத்தாலகர் ஆதேசம்)
காரணத்தைக் கற்க அததன் காரிய
வர்கம் அவையும் அறியப்போம் -- ஆரணத்து
ஆன்ற முழுமுதல்வேர் தன்னை அறியவாம்
தான்தோற்று வித்தாள் உலகு.

(4) பூம வித்யா ::

(நாரத-ஸநத்குமார ஸம்வாதம்)
வாக்கு உரையாடல் உள்மனது புத்தியின்
மிக்கறிவு அஃதினான்ற மெய்யறிவு -- ஒக்கவுடல்
அன்னபானம் செய்கதிர் வான்நினைவு ஆர்வத்து 
மன்னுயிர்மேல் ஈசன் பெரிது.

பெரிது பெரிது புவனம் பெரிது ;
பெரிய அதனின் பெரிய -- துரைக்கில்
அரியவன் கண்டு நினைந்தவன்சீர் கேட்கின்
தெரியகில்லார் மற்றெதுவு மே !

(5) தகர வித்யா ::
(கோபி சௌலப்பிய பூமா ?)

வானாளும் வைகுந்த மேனாளிப் பானாலும்
தானாக தண்ணளி காட்டித் -- தழைவானாய்
இன்னார் இனையார் எனப்பாரா துள்ளத்தே
தன்னை இருத்தும் பெரிது.

(6) அந்தர்யாமி வித்யா ::

உலகும் உயிரும் உறுபொருள் எல்லாம்
இலகல் அறிந்திலவாய் நின்று -- அலகிலவை
ஆளும் அவனாம் அமிர்தம் அஃதாவார்
ஆளாம் உடல்-உயிர் போன்று.

(7) ஆனந்தமய வித்யா ::

உயிர்ப்பொருள் தன்மை உரையில் அறிவு
பயப்பதாம் ஆனந்தம் அன்றி -- செயற்பாட்டில்
நேய திருநா ரணரவர் சேவகன்
ஆய பதிற்றுமத்தால் இன்பு.

(8) வைச்வானர வித்யா ::
(விஸ்வாந் நரான் நயதீதி வைஸ்வானர :)
 
உண்டது உந்தி செரிக்க உதரத்தே 
 கொண்டது ஓர்நெருப்பு அஃதாய்தான் - மண்டும்
பெரும்பூதம் என்பர் அதுநிற்க ஊரும்
உலகும் பெரும்பதம் ஆக்கு.

(9) உபகோஸல (அக்ஷி) வித்யா ::

(ஸ்ரீமத் தேவபத பிரதர்சன பர :)

கமலமலர்க் கண்ணன்என் கண்ணிலுள்ளான்
என்பதோர்
சேமநல் வார்த்தை யதுஉண்டு. - நேமமுடன்
அந்நேர் நினைந்து அவன்குணம் கூறுவார்க்கு
வானமுதும் தானபயம் காட்டு !

(10) பஞ்சாக்நி வித்தை ::

முகிலில் தவழ்ந்து (1) மழையோ  டிணைந்து (2)
சகத்து செறுவில் விளைந்து (3) -- உகப்பார் 
உடலில் புகுந்து (4) கலவியில் கற்ப 
குடத்தை அடைதல் (5) பிறப்பு .

1224. உடுகுறை ::

குறைஒன்றும் இல்லா நிறைவாளன் ஆன
மறைமூர்த்தி மாலுக்கு ஏதும் -- குறையுண்டோ ? 
நேரில் அதுவிலக கூறையோர் முன்னூறு  
ஆறைந்து ஏறி இடல்.

1225. சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுந :: கீதை 7-16.

அந்தணர்கு ஆவன் அனலாய்; யோகிகள்
வந்திக்க மேவும் இதயத்தே — மந்த
மதியர்க்கும் அர்சையில் ஆமவனை எங்கும்
எதிலும் தொழல்சம நோக்கு. 

1226. ஆதிவராஹர்க்கு அன்பாய நம்பாடுவான் ::

பசியோடு ஆன பிசாசம் வசமான 
கைசிக ராக விரகனை — யோசியாமல் 
வீடுசெய் வார்தைநம் கேசவனை ஈடுபிற 
தேவர்க்கென் பேசல் தவிர்ந்து.

1227. பிதா-புத்ர-பிரவர்தகஹ ::

பிரம குருவாம் அரங்கர்க்கும் ஆசான் 
துரீயநம் மாமுனிகள்; செல்வதிரு — நாரணர் 
தம்தமப்பன் நம்மி ராமா நுசன்போல்-நம் 
பிள்ளைக்காம் பிள்ளை இவர்.

1228. பகவத் ஸம்ஸ்லேஷ நிர்தேசனம்
க்ரீஷ்மே சீதமிவ க்ருதம் ::

திருமா மகள்றன் தனத்தணையில் தன்தலை 
சேர திருக்கண்  வளர்மாலை --  நேர்ப்பித்து 
நின்னுடமை இவ்வடிமை  என்பதா ஓர்பித்தாள்    
தென்புதுவை கோதைமுன் நோற்று.  

1229. சரீராத்ம வத்தயா ஸர்வம் :: 

இப்பால அப்பால யாவையும் ஈசனின்
துப்பாய போக்கி மருவாம்போல் — ஒப்பிலவா 
ஒன்பதின்மர் நம்மாழ்வார் தேக அவயவமாய் 
தன்தோழி தாயராம் கோதை!

1230. அத்யாச ருசி வாசனை குண ஹாநி ::
(தீயகந்தம் உள்ளதொன்றை சேர்ந்திருப்ப தொன்றுக்கு 
தீயகந்தம் ஏறும் திறம்)

வினையூண் உயிர்க்கு அதனின் உறுமோக்கம் 
தானும் உளதாய் உறாதுழற்றல் -- ஏனாம் 
எனவினவில் ஓர்செயல் ஒன்பதின்கால் ஊட்டும் 
மனம்,ருசி வாசனை தொட்டு. 

1231. கேநோபநிஷத்தில் பிராட்டி வைபவம் ::

வெற்றிக் களிப்பில் அதுஇறை சக்தியால் 
பெற்றது எனமறந்த தேவர்முன் -- தோற்றும் 
பிரமத்தை யாரென் அறியா  திகைப்ப 
அரிஎன் உணர்த்தாள் உமா!

{உ+ மா = ரூடி அர்தத்தால் ருத்ர பத்நியைச் சொன்னாலும், உகார வாச்யைளான பிராட்டி மா-என்று லோக ஜனனியான படிக்கு உமா சப்தம் பெரிய பிராட்டியைத்தான் சொல்லும் என்பதற்கு அட்டி இல்லை}

1232. ஸுலப ஶ்ரீதர ஸதா ::

மனைமடதி மாடு மக்கள் எனவாய்
அனைத்திலும் பற்று நடக்க,மால் — தேவனை
நாடியவன் தாள்பிடிக்க வெள்கிலமாய் எம்மின்
மடமைக்கு நக்கமால்நம் திக்கு. 

1233. அஞ்சு குடிக்கு சந்ததியாள் வாஞ்சை ::

இறைநிலை ஐந்தும் அடியார்கள் ஈட்டம்
நிறைநிறை நாடியும் சேத்திரதா - னீகர்
முறைமுறை முன்இரந்தும் மாயனை மாலை
பறைகறந்த தாம்பாவை நோன்பு. 

1234. வேற்றுமையில் ஒற்றுமை. 

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் ஆயுளோடு ஐச்வர்யம் 
தேறு தொழில்வளம் கல்வி  -- அறுத்து 
நிறுத்து தருமன் உறுத்தும் மரணமைந்தும் 
கூறுங்கால் வேறாம் திறத்து. 

1235. மும்மைசால் மந்திர மும்மூர்த்திகள் ::
(சரணாகதிக்கு மலையப்பன் -
உபாயத்துக்கு வரதன் - 
உபேயத்துக்கு அரங்கன்)

அடிதொட்டு தன்னபயம் காட்டுமலை யப்பன்!
படிக்கட்டு மூவெட்டின் மேல்நின்று -- வீடுபயன் 
கூட்டும் வரதன்! முடிதொட்டு எட்டெழுத்தான் 
ஈட்டும் அரங்கன் பணித்து!

1236. யம கில வ‌ததி தஸ்ய கர்ணமூலே
பரிஹர மதுசூதந ப்ரபந்நாந்
பிரபுரஹம் அன்ய ந்ருணானாம் 
ந வைஷ்ணவாநாம் ::

பரிகாரம் பார்த்து கழிவிரக்கம் ஓர்ந்து
அரியாம் இறையும் குழையில் — அரிய
ஊழை விலக்கலோடும் கூற்றின் பிழைக்கவாம்
நம்மண்டை ஓட்டில் பொரி. 

1237. பரமாத்மநயோர் ரக்த : விரக்த : அபரமாத்மநி ::

மாயா மிருகம் தனைநச்சி நாயகனை
கோய வளானசீதை போலாவே — மேய
உலகில் இறைஉணர்வு இன்றி பொறியுணர்வு
கோலி நடப்பார் நலிவு. 

1238. அவதார ரகசியம் ::
(பள்ள மடை போலே வள்ளல் அவதாரம்
கள்ளர் கழிவது அவரவர் விதி வசம்)
[ஏரியாம் வண்ணம் இயற்றும் அதுவல்லால்
மாரியார் பெய்கிற்பார் மற்று]
பிரியில் தரியா அரிய அடியார்
பெரிய அவாவில் தழுவி — முழுசி
பரிமாறத் தோன்றி பகைமுடித்து நல்லறம்
சோரா துயற்றப் புகும்!

1239. பிரகாரம் பிரகாரி ::
(மலரும் மணமும் போல், மணியும் ஒளியும் போல அப்ரதக் சித்த விசேஷணங்களாம் அவர தத்துவங்கள்)
ஊனில்வாழ் இவ்வுயிர்போல் எவ்வெவையும் தன்வீடாய்
வானில்வாழ் எம்பெருமான் வாசம்செய் -- வானாகில்
பீலித் தோகைபோல் மூடி விரியுமேலும்
கூடிப் பிரியா தவை.

1240. பக்தியா த்வநன்யயா சக்ய:
மத்பக்திம் லபதே பராம் ::
(பேற்றுக்கு உபாயம் அவன் நினைவு).
பசிஇலையாய் சோறு ருசிக்குமோ? சோறு
இசைய பசிதான் வருவதோ? — வாசி
தெரியில்மால் பக்திக் கிசையா தொழிகையும்
ஏரிசெய மாரிபொய்த் தற்று.

1241. பிராப்ய ருசி கைங்கர்யத்தில் புகுத்தும் ::

ஆர்வம் அகத்தெழுந்து இச்சா ருசிஇயைய
பேர்ந்துமால் பக்தியாய் மீதெளிப்ப — ஆர்த்தி
தலைக்கெய்தி செய்யுமவன் சேவகம்தான் மேலைத்தொல்
பட்டாங்கில் உள்ள படி!

1242. பகவத் காமத்திற்கு துணை தேட்டம் :

புதியாள்மால் பித்தாள்  பேயாள் அணிசேர் 
பதியாள் கிருட்டிண பக்தி -- குதூகலத்தாள் 
மாமன் மருகாள் செய்துற்ற வேள்வியாள் 
ஏமமில் பொற்கொடியாள் நற்செல்வன் தன் தங்காள் 
போதரிக் கண்ணினாள் நாவுடையாள் கோகிலமாம் 
மாதரிவர் ஆண்டாள் அணிமென் தோழியராய்  
வேதநல் வாயரை  முன்னிட லாய்நாதன் 
நாரணனை தம்பதியாய் நோற்று. 

1243. துல்ய விகல்பம், விவஸ்தித விகல்பம் ::
(பொருள், பொன் போலே பகவான்-
மணியைப் போலே பாகவதர்கள்)

பிறவி எனும்பாவக் காட்டில்  பழுத்துப்
பெறலறிய இன்கனி ஈதிரண்டில் — ஆறாத
மாறில்மாக் காதல் பகவற்கோ? பக்தருக்கோ?
சாறு கனப்பதூம்பின் ஊட்டு. 
[ இதுவா, அதுவா என்பதில் எதுவாயிலும் - துல்ய விகல்பம் இருகரையரைப் போலே. 
இதுதான், இல்லையேல் அது - விவஸ்தித விகல்பம் 
அவர்களைப் பார்த்து சிரிப்பராம் ஒருவர் மதுரகவி ஆழ்வார் போலே.  ]

1244. ஆர்த்த ரக்ஷண ப்ரதீக்ஷன்  அச்சுதன்  ::
முதலைவாய் அன்று சிறைப்பட்ட ஆனை;
காதல் மகன்எனாது காய்ந்த --இரணியன்; 
பேதைப்பாஞ் சாலி பரிபவம் ஈதும் 
தனதிடராய் எண்ணித் தடிந்து.

1245. அநுஷ்டாதா-அனநநுஷ்டான கைங்கர்ய பர : யாரே நிஷ்ணாதா ?

கசக்கி உடுத்தல் பருத்திக் கடுக்கும்;
கசக்கா துடுப்பதே பட்டுக் — கிசைவு; 
சிரைத்தலும் கூட்டலும் வேண்டா மாலே
நெறிவாசல் காட்டும் நமக்கு. 
நோம்பியர் ஓம்பிடா வாழுநல் சோம்பர்க்கும்
ஆம்பரிசு ஆய்ந்துகொடு ஈட்டுவார் — தம்மில்
மழித்தலும் நீட்டலும் வேண்டாதே மாலே
வழிவாசல் காட்டக் கிடைத்து. 

1247. என்னால் தன்னை தான் பாடி ::

காட்டி கழலிணைக்கு தொண்டாய் எனையுன்பால் 
கூட்டிடாய்! ! மற்றெல்லாம் பேசிஎன் ? -- கேட்டாயேல் 
பாட்டினால் நின்னையே ஏற்றிட முன்மொழிந்தாய் !
வீட்டின்ப வேட்கை வளர்த்து. 

1248. மக்நான் உத்தரதே சாஸ்திர பாணிநா ::
உன்னைப் பெறஉன் அடியார் அடைவேனாய்
பின்னை அவர்தாம் தமரில் — தலையாய
நன்நெறி ஞானத்துயர் தேசிகனைக் கூட்டுமால்
உன்னில் அவர்நின்னின் மாறு! 

1249. சேயன் அணியன் செந்தாமரைக் கண்ணன் ::
ஆசையாய் அன்பர் அழைக்க அதற்கு
இசைவானாய் நன்றுநம் நாரணன் — யோசியாமல்
நாயந்தே என்றவச்சொல் கேட்டலும் தட்டாமல்
காயும் கருத்தான் வரும்.

1250. பஸ்சாதாதபி  பிராயசித்த :

தெரிந்தே தவறிழைத்தேன் இன்னம் இழைப்பதோர்
தூரில் அகப்பட்டேன் ஆகவெனை — உன்பால்என்
சேரா வகைஎண்ணு கின்றாய்? கழிவிரக்கத்
தாறா அரற்றான் இரங்கு. 

1251. மோக்ஷம் இச்சேத் ஜனார்தன :

வினைவீய வாழகில்லேன் என்றாலும் தாழகில்லேன்
ஊனில் உழன்று உலகில்; — எனைத்தோறும்
ஏங்கி அழைக்கின்றேன் ஆவிக் கருள்கண்டாய்
ஈங்கிப் பிறவி முடித்து!

1252. மருத்துவனாய் நின்ற மாமணி வண்ண ! நின்னலால் 
இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்தறிவாரும் இல்லை ::

செய்வினையோ சேண்பெரிது உய்வகை ஒன்றும்தான்
ஐய்ய! அதற்கில்லை;  மெய்வாய்கண் — ஐய்ந்தவை
செய்பாழ் படிறுக்கு தாழும் விதிபோழ்க்க
பையரவின் மேலானைச் சூழ். 

1253. வெறிதே அருள்செய்வார் செய்வார்கட்க்கு ::

சென்நாளின் நாள்பின்னும் எத்தனைநாள் காண்இங்கு
இன்னம் உழல்வேனோ?   உன்னால்தான் — என்றல்லால்
மாலெனுக்கு பன்னிப் பிறவாமை நீடலது
ஏலாவே என்ப துணர்ந்து.

1254. சாம்யாபத்தி மோக்ஷ சதுஷ்டயம் ::

பொன்றுவேன்! பொன்றுகை யார்க்கும் உளதால்!பின் 
ஒன்றுவேன்! நின்னொடும்  விண்ணமர் -- நின்தமர் 
தன்னோடு; என்றாங்கு நின்னொத்த கோலகளிப்  
அன்னதும் ஆக எனக்கு!
  
1255. கூடிற்றாகில் நல்லுரைப்பு :: 

நின்னை சரணடைந்தேன் நேமி நெடியானே!
முன்னை வினைகழல ஒண்டொடியாள் — தன்னையும்
முன்னிட்டேன்! என்னை இனிஉன் பொருட்டாநீ
உன்னிட்டால் உய்வாம் உயிர்க்கு. 

1256. தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ::

அந்தண்மை ஒன்றிலும் நின்றிலேன்! நீதிநூல் 
செந்தண்மை கொண்டும் ஒழுகிலேன்! -- எந்தானும் 
நாயந்தேன் என்னையும் மாலே! நினைவதாயின்  
காயும் தகைஆக அஃது!

1257. ந ச தஸ்மாந் மனுஷ்யேஷு கிருஷ்ண ப்ரியக்ருத் தம:

வீட்டின்ப பாட்டிவை கேட்டின் புருவாரும்
மாட்டிற்று ஆகில் இசைக்கூட்டி -- வேட்கையால்
வேட்டுவார் மாட்டிவை விண்ணப்பம் செய்வாரும்
ஈட்டுமிடம் மாலோன் மனத்து.

1258. கபோத-வியாத ; வியாக்ர-வானர விருத்தாந்தம் 
(ஒரு பக்ஷி பெருமாள் ஹ்ருதயத்தை புண்படுத்தியது 
கிடீர் நமக்கு அபய ஹேது) :

பழிபாவம் நீங்க பரிகாரம் நீடும் 
வழிபல வேனும் அபகாரம் -- ஆழியான் 
கோபக் கனல்அவற் றுக்கு  அவன்தாளே 
தாபம் தணிக்கும் தடம். 

1259. அதி ஸர்வத்ர வர்ஜயேத் ::

மணம்கமழ் சந்தன மேனும் அதுதான்
மணங்களவில் மிக்கு இருப்பின் — உணங்கது
போல எரிதுரும்பாம்; அன்பதிகம் ஆனாலும்
ஏலா, இறைக்கதுவே சால்பு.  

1260. திருட சங்கர்ஷண அச்சுத :
பிறப்பிறப் பென்னும் பெரும்தூற்றில் வீழ்ந்து 
புறம்காணா நோவுபட பெற்றபாவி — தம்பேறா 
தம்மேல்செய் பக்தி எனும்ஞானக் கைநீட்ட 
நம்பி நலம்பயந்தார் உய்ந்து. 

1261. அந்திம ஸ்மிருதி வர்ஜனம் - பிரபன்னாதிகாரிக்கு.
அந்த மதி : ஸா கதி : -உபாயாந்தர நிஷ்டருக்கு ::
மால்வேட்டி மால்கேட்டு மால்சேர்வார் மால்மயக்கம்
மாலோட்டை ஆலிப்பின் மேலீட்டால்!— மால்ஈட்டம்
பால்நாட்டம் நூலாட்டி கண்காட்டி முன்னோட்ட
கால்கட்டா காலன் கயிறு!

12362. தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் மற்றப்பேர் ::

பேர்கள்ஓர் ஆயிரம் ஏந்துநம் மால்உகக்கும்
பேர்கள் அதுயிது என்னலாவ — தார்சொல்ல?
எங்குமுள தன்மைக்கு மூன்றும் அபதான
தாங்கு உளயாதும் ஏற்பு!

12363. மன்மத ஜனக சாட்சாத் மன்மத : 

அழகன் முருகன் எனத்தமிழர் கொண்டாட்டும்
தாழும் படிநம் அழகர் — எழில்காண் 
உலகோர் அதைத்தான் இவனிடு பிச்சை 
அலவோ? எனவாய் மொழி!

1264. சூரியனார்  துதி ::

ஒருகால் இருகூறு முப்போது நால்வடத் 
தேரின்மேல் வாரும் தினகரன் — பாரின்மேல் 
பட்டொளி பால்தேன் எனஓட ஐம்பசி 
ஓட்டும் எழுமைக்கும் ஆறு.

1265. துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை ::

தும்பித் தளும்பும் கடல்துணையை ராப்பொழுது
இம்பி பிரிந்த நிலையில்தன் — செம்பொன்
உடலம் கொதிப்ப பகலோன் அணைப்பால்
படியிதில் பெய்யும் மழை. 

1266 வீரம் யோகம் போகம் வேகம் ராகவ-யாதவீயம் ::

நின்றான் இருந்தான் கிடந்தான் பறந்தவன்தான்
அன்று நடந்தானாய் ஐவரசேர் — மன்றில்
ஒருவல்லித் தாமரையாள் தன்னோடு ஆண்டாள்
திருவல்லிக் கேணியுள் காண்டு. 

1267. பொய் தோற்றதுய்தர செய்வார்க்கு ஐயமென் ?

பக்திக் கடியாம் புலன்ஒழுக்கம் பொய்யாமை
தக்க விடத்து தகவுடைமை — அஃகம்
சுருக்கி பகவர்க்கு ஆளென் றழைப்ப 
இருந்தறியேன் ஏழைக் கிரங்கு. 

1268. தாய்தன்னை அறியா கன்றுமில்லை, ஆவும் அஃதே::

பொன்னார்செய் மேனியனை! இப்புவன சுந்தரனை!
இன்னார் எனவறியா ஏழையை — என்நான்என்
சொல்லுகேன்? மண்ணில் இருந்தும் இலையாவார் 
அல்லவே? மீள்பிறவிக் குய்த்து. 

1269. செய்த குற்றம் நற்றமாய் நச்சுமென் அச்சுதனே! :;

கழிவிரக்கம் கொள்ளும்என் வஞ்சநெஞ்சை மாலே!
வழிஇலைபோல் நம்புதி நன்றே! — பழிஇவன்
பாடே ஒழிய அருள்கை அழகுனக்கு
ஈடே இலைஎனவாய் நீடு!

1270. யதா நத்ய ஸ்யந்தமாநா சமுத்ரேஸ் தம் கச்சந்தி நாம ரூபே விஹாய 
ததா வித்வான் நாம ரூபாத் விமுக்த பராத்பரம் புருஷன் உபைதி திவ்யம் -முண்டகோபநிஷத் -3-1-8
(நதிகள் நாம ரூபம் தொலைந்து கடலை அடைவது போல  முக்தாத்மாக்கள், புண்ய பாபங்களை உதரி நிவிர்தராகி பரம்பொருளை அடைகின்றனர்).

மலையில் பிறந்து கரடுமுரடு ஆனதன் 
சாலை வழிநடந்து பன்நகரத் -- எல்லை
கடலில் கலக்கும் நதிபோல் கடவுளில் 
சேரும் உயிர்தம் மலக்கு .

1271. முக்குள் மாயை :: 

கூரைமேல் தூங்கு மழைநீர் குமிழதும்
தாரைபோல் வீழமாயும் தன்மைபோல் — சூறையாம்
வாழ்விதில் நூறுநூறு ஆண்டுகள் தாம்நிலைப்ப
சூழ்தரக் காணல் கனவு ! 

1271. இறை உணர்வுக்கு இடைத்தரகர் வேண்டுவது என்? 

கொடிநிமிர்த்த சுள்ளிக்கால்; அன்நிமிர்ந்த பள்ளி
பிடித்து நடந்துவேய் பந்தல் — படர
கொழுகொம்பாம் தேசிகனும் மால்மகளும் சூழடியார் 
கூட்டமும்காண் வான்படிக் கட்டு. 

1272. ஸம்சார போகி சந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: 

பாம்பொக்கும் இப்பிறவி என்னும் பிணிஅதனை 
போம்படி யாக்கும் கருடநல் — மந்திர 
வாதி எனவுலகோர் இம்மை ஒழிக்கும் 
எதிராசர் எம்மின் கதி.

1273. ஆசார்ய சம்பந்தம் ஒழிந்த பகவத் சம்பந்தம் 
அடியார்கள் விதுரமான ஈஸ்வர சம்பந்தம் போலே தியாஐ்யம் ::

உய்தற் குதவும் இராமா னுசனைநாம் 
எய்தற் குதவும் குருவவரால் — வாய்த்த 
உறவும் நடுவில் குடியார் தகவும் 
உரையில் முழங்கை ஒழுகு.

1274. பலரடியார்முன் பரிசளித்த பாம்பணை அப்பன் ::

வானேற நல்வழி தந்த எதிராசர்
தானும்கை காட்ட எதிர்சேவை — ஆமாறு
ஆங்கடியார் மாமணி மண்டபத் தெம்நிறுத்த
நங்கள்மாற் காட்செய் பரிசு. 

1275. குத்ருஷ்டி குஹநா முகே நிபதத : பரப்ரஹ்மண :
கர க்ரஹ விசக்ஷணோ : ஜயதி லக்ஷ்மணோயம் முநி : 
(யதிராஜ சப்ததி-38)

கண்ணால் மனத்திரையில் ஊகத்தால் ஆகாதாய் 
எண்ணத் தெழுதிவைத்த சாத்திரம் — ஒண்ணால்
உணரவாம் ததுவத்தை நூலாட்டி யாள்நற்
துணையின்றி நம்பல் பழுது. 

1276. வியவசாயோ அவ்வியவசாய : 

அழையா இடத்து நுழையா திருத்தல்
பிழையா திலையே; எதுபோல்? — மொழியில்
ஆப்பை அகற்றிதன் வால்அறுந்த மந்திபோல்
மூக்கை நுழைத்து முறிந்து. 

1277. தலையை கொத்திப் பார்த்து ஒருவழியாலும் பசை காணாதொழிந்தால் அபிராப்தம் என்று கண்ணநீரோடே மீளும்போது தனக்கேற இடம் கிடைத்தவாறே . . . ஒன்று பத்தாக்கிக் கொண்டு போரும் ::

தாய்சினந்தால் சேய்உயிர் வாழுமோ? ஆழியங்
கைஅனந்த! வாய்த்த பிறவிவீண் — செய்நினைந்து
காய்தெனை கைவிட லாமோதான்? மாய்தினி
ஆய்ந்தருள் செய்வாய் அடிக்கு. 

1278. என் உடம்பின் அழுக்கை நானே போக்கேனோ? 
அமேத்ய அசைய்ய குழந்தைக்குத் தாய் பரிந்துசெய் பாங்கு ::

யான்என் பிறந்தனன்? என்நோற்று எங்குறுவன்?
ஞானத்துள் நின்றுதிரு நாரணன்றன் — சேண்வீடு
காணும் வகையொன்றும் கற்றறியேன்! பேணான்
கருத்துள் புகுந்திரும்மால் எற்று?

1279. தேவதாந்தரங்கள் ஶ்ரீவைஷ்ணவர்கள் இட்ட வழக்காய் இருக்கும் :: 

நாளும்வான் கோளும் நமக்கில்லை என்பது 
ஆளும் அவைபொய் எனவாக — ஏளனம்
அன்றாமால் ஏனத் துருமால் அனுகூலர் 
கென்றும் நலங்கருதும் என்று.

1280. நரகநாசனை அடைந்தார்க்கு இல்லை அல்லல் ::

நரகத்தை நீநகு நெஞ்சே! நாரணன்றன்
சீராதி வாகரெமை கைபற்றி — தேரனேற்றி 
கொள்ளமாளா இன்பதுய்தல் வெள்ளை சுகமவன் 
வீற்றிருந்தாட் செய்உல கத்து. 

1281. விஸ்வேஸ்வரகும் சிவம் அச்சுதம் :: 

ஆரமுள அன்னை அவளமரும் தானமுள
யாரும் அவன்திரு மார்பினில் — சேர்ந்துறைய
ஆதிசிவன் தானுமுளன் கொப்பூழ் கடிகமல
வேதியன் மேனித் அயன். 

1282. உபகாராத் ஸுக்ரீவ :
ராஜ்ய காங்க்ஷீ விபீஷண :
நிஷ்காரணோ ஹநூமத :

பிறரை விட்டுநின் தாள்நச்சி னாரிலும்
வேறானாய் நின்உகப்பு ஒன்றுமே — தேறுமதும்
என்முயற்சி தன்னால் அலதாய் திருமாலே!
நின்கருணை அஃதாய் நடத்து. 

1283. நம்மாழ்வார் ::
(சங்கப் புலவர்கள் சங்கித்த படி)

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசமோ? நாரணமோ? --  தாமம் 
வகுளமோ? துளபமோ? தோளுமிரண் டோ?நான் 
குளவோ ? பெருமான் உனக்கு !

1284. ஸாயுஜ்ய ஸந்தர்ஷண ஸம்பவாத் -  
அம்ருத சாகராந்தர் நிமக்ந ஸர்வாவயவ : ஸுகமாஸீத||

தூமழைத் தூரல் கடல்நீர் கலப்பதுபோல்
ஊன்எழு இவ்வுயிரும் மோக்கத்து — ஆழுங்கால்
மெய்ஞான வான்சுடரில் தீக்கதிர் வீழ்ந்தற்று
உய்போகம் உள்ளாகப் பெற்று. 

1285. தாயில் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
என்பதை நடத்திக் காட்டிய கண்ணனும் ராமனும் ::

பிறப்பிலி பெம்மானை பெற்றெடுத்த தாயரிலும்
வேறாம் அவனடியார் ஈன்ற — திருவயிற்று
தேவியர்தாம்; உத்தரை கூறில் பகவான்
அவனோடு பக்தன் சுமந்து. 

{அதிதி, கௌசல்யை, தேவகி மூவரும் பிறப்பிலியைப் பெற்றெடுத்த தாயர். ஸுநீதி, கயாகு, ஸுமித்ரை இவர்கள் துருவன், பிரஹ்லாதன், லக்ஷ்மணன் ஆகிய அவன் அடியார்களைப் ஈன்ற மூவர் . உத்தரையோ பரீக்ஷஇத்தைக் காக்க அவள் கர்பத்தில் அவனை சுற்றி சுழன்ற பகவானையும் சேர்த்து சுமந்த (உது+தரா) மேலானவள் - என்பதை விளக்குகிறது இந்த தனிப்பாடல்}.

1286. ந ஹ வை ஸசரீரஸ்ய ஸத : பிரியாப்ரியயோ : அபஹதி: அஸ்தி |
அசரீரம் வா வஸந்தம் பிரியாப்ரியே ந ஸ்ப்ருசத : (சாந் .8-12-1) 

உருவும் அருவும் இருபால் இறைதன்
இருப்பாய்க் கருதில் விரவும் — உயிரும்
அருவத் திருப்ப இயலுமே இச்சித்து
வானுறு வைகுந்தம் புக்கு!

ஆ-இரண்டாம் அத்யாயம்-அவிரோத அத்யாயம் -முதல் பாதம் -ஸ்ம்ருதி பாதம் -10-அதிகரணங்கள்–

நான்காவது-சிஷ்ட அபரிக்ருஹ அதிகரணம்-1 ஸூத்ரம் —
ஐந்தாவது -போக்த்ராபத்த்யதிகரணம் –1 ஸூத்ரம் ———–

போக்த்ராபத்ய அதிகரணம் : 2-1-5 :

சரீரம் இருந்தாலும் கூட சரீர நிபந்தனமான ஸுக துக்கங்கள் பிரஹ்மத்துக்கு கிடையாது என்பது அதிகரண சாரம்.
புனரபி ஸாங்கிய : பிரத்யவதிஷ்டதே. மீண்டும் சாங்கியர்களின் ஆக்ஷேபம் இங்கு.
என்னவென்றால் சரீரத்தித்துடன் கூடிய ஜீவாத்மாவுக்கு எப்படி ஸுக துக்க அனுபவங்கள் உண்டோ,
அப்படியே அவைகளை சரீரமாக உடைய பிரஹ்மத்துக்கும் ஸுக துக்கங்கள் தவிர்க்கப் போகாது.
அத்தாலேயே கர்மானுபந்தம் பிரஹ்மத்துக்கு வந்து சேரும். ஆகாகையால் பிரஹ்ம காரியமான சேதநாசேதங்கள்
அந்த பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்பதாக பூர்வ பக்ஷம் –

காரியாவஸ்தையில் உள்ள சிதசித் விசிஷ்ட பிரஹ்மமும் ,
காரணாவஸ்தையில் உள்ள சிதசித் விசிஷ்ட பிரஹ்மமும் வேறு வேறு என்பது இத்தால் பொருந்தாது என்பதாக அவர்களுடய ஆக்ஷேபம். 

சூத். 2-1-14 :: போக்த்ராபத்தே: அவிபாகஸ்சேத் ஸியாத் லோகவத் ::

ந ஹ வை ஸசரீரஸ்ய ஸத : பிரியாப்ரியயோ :அபஹதி: அஸ்தி |
அசரீரம் வா வஸந்தம் பிரியாப்ரியே ந ஸ்ப்ருசத : (சாந் .8-12-1) 

எதுவரையில் சரீர சம்பந்தம் உண்டோ அதுவரையில் ஸு க துக்கங்கள் அழிவதில்லை.
ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் மூன்றும் கழிந்த போதே ஸுக துக்கங்கள் தொடுவதில்லை.
என்பதாக முதல் அத்யாயம் 2ஆம் பாதத்தில் ஆத்மாவை சரீரமாகவும் அதற்கு அந்தர்யாமியான பரமாத்ம உபாசனத்தைப் பற்றி
விசாரிக்கும்போது ஸுக துக்க தோஷங்களால் அவனுடைய உபாஸ்யத்துக்கு ஊறு இல்லை என்பதாக
தெளிவு படுத்திய விஷயத்தை மீண்டும் பூர்வ பக்ஷம் இங்கு சொல்வதற்கு காரணம் 

சரீரத்தில் பால்யம், யவ்வனம், மூப்பு, நரை, திரை போன்ற விகாரங்கள் ஆத்மாவுக்கு இல்லையானாலும்,
கர்ம நிபந்தமான ஸுக துக்கங்கள் சரீரத்துக்கு இல்லையாய் ஆத்மாவுக்கு உண்டுபோலே ,
காரண பிரஹ்மமும், காரிய பிரஹ்மமும் வேறு என்ற போதிலும், சரீரமான ஆத்மாக்களுக்குண்டான
சுக துக்க உபபோக்த்ருத்வம் சரீரியான பிரஹ்மத்துக்கு இல்லை என்பது சேராது. 

சரீரத்தோடு கூடிய பிரஹ்மம் காரணம் என்று சொன்னால் , ஸுக துக்க தோஷம் தட்டும்.
சரீரமல்லாத (கேவல) பிரஹ்மம் காரணம் என்று சொன்னால், ஜகத்தில் உள்ள அபுருஷார்த்தங்கள் , பிரஹ்மத்துக்கும் வந்து சேரும்,
எப்படி ஆபரண தங்கத்தில் (காரியத்தில்) உள்ள தோஷம் செப்பு கலந்த கட்டி தங்கத்தால் (காரணத்தால்) வந்ததோ அதுபோல.
ஆகவே பிரஹ்ம காரண வாதம் அநுசிதம். பிரதான காரண வாதமே தர்க சம்மதமானது என்பதாக சாங்கியர்களுடைய பக்ஷம்.. 

போக்த்ராபத்தே :அவிபாக :
சரீரத்தோடு கூடிய பிரஹ்மம் காரணம் என்று சொன்னால் ,
ஸுக துக்க அனுபவ வாசி அற்ற பிரஹ்மமும் ஆத்மாவும் வேறு ஆக முடியாது.

இதிசேத் ஸியாத் லோகவத் –
சரீரம் இருப்பதனாலேயே ஸுக துக்க போக்த்ருத்வம் உண்டாகிறது என்பது தவறு.
காரணம் – ஸுக துக்க அனுபவத்துக்கு புண்ய பாப கர்மா காரணம் அன்றி சரீரம் இருக்கிறபடியால் அல்ல.
பரமாத்மாவுக்கான சரீரம் கர்ம கிருதமான சரீரம் அல்ல. இச்சா கிருஹீத அபிமத உரு தேக : என்று ஸ்வேச்சா கிருஹீத சரீரம். 

ஸயதி பித்ரு லோக காமோ பவதி – சாந். 7-26-2
ஸஏகதா பவதி த்ரிதா பவதி – சாந். 8-2-1
ஸ தத்ர பர்யேதி ஜக்ஷத் க்ரீடந் ரமமாண : சாந். 8-12-3
என்றபடி ஆவிர்பூத ஜீவாத்மாவுக்கே துக்கமாகிற அபுருஷார்த்தம் கலசாத ஸ்வேச்சா சரீரம் பிராப்தமாக,
பாபங்கள் இல்லாத தன்மையை இயற்கையாகவே கொண்டுள்ள பரமாத்மாவுக்கு
ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபத்தில் சேதனாசேதன விசிஷ்ட சரீரத்தோடு கூடி இருப்பினும், அவனுக்கு கர்மபந்தம் சிறிதும் இல்லையாய் ,
அபுருஷார்த்தம் கலச வழி இல்லை.
எதுபோல என்றால், ராஜ ஆணையை மீறுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையால் வரும் துக்கம் ,
தவறு செய்கிற பிரஜைக்கொழிய , ராஜாவும் சரீரத்தோடு இருந்தானாயினும்,
தோஷித பிரஜையின் துக்கம் ராஜாவுக்கு லோகத்தில் அந்வயியாது போலே கொள்க.

யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப் படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே–3-4-10-

தோய்வு இலன்–சேதன அசேதனங்களுக்கு அந்தராத்மதயா வியாபித்து நின்றால்
தத் கத தோஷை அஸம்ஸ்ப்ருஷ்டன் -அவற்றின் தோஷங்களால் தீண்டப்படாதவன்’ என்கிறார்.

அசித் கத பரிணாமாதிகளும் சேதன கதமான துக்கித்தவாதிகளும் தட்டாதென்கிற இதுவும் ஸர்வேஸ்வரன் பக்கலிலே கூடலாம் .
இப் பாட்டில் பக்தி உடையார்க்கு அவனைக் கிட்டலாவது என்பாருண்டு.
இதர விஷய சங்கமற்றார்கு அவனைக் கிட்டலாவது. என்பாருண்டு.
அந்திம ஸ்ம்ருதியுடையார்க்கு கிட்டலாம் என்பாருண்டு.
ஸர்வாத்ம பாவம் சொல்லி நிற்கையாலே அவற்றின் பக்கல் தோஷம் தட்டாதான் ஒருவன் என்னுமிடம் சொல்ல வேணும்.
அத்தைச் சொல்லுகிறது என்பர் – எம்பெருமானார்.– 24000 படி

(Credit - Thiruvonam weblog).

1287. பர்யங்க வித்தை ::
(பிரகாரி-பிரகார சேஷபூத : ஆத்மா)

அண்டப் புறத்தவாம் நீள்நகர மாமணி
மண்டபத்து சூழடியார் தேவிமார் — தொண்டதாள்
பாம்பணை அப்பன் மடியிருத்தி யார்யென்ன
நும்பணிசெய் மெய்அடியான் என்று ! 


1288. ஸககார நிரபேக்ஷத்வாத் ::
(யத்ப்ரூ பங்கா: ப்ரமாணம் ஸ்தரசர ரசனா தாரதம்யே முராரே)

உன்னியுன்னி இவ்வுலகம் யாவும் படைத்தலும்
தன்னால் அலாது துணைதேடா — தன்மைத்தாய்
இன்துணை பங்கய வல்லியும் இன்புற
நம்வினை செய்விளை யாட்டு. 

1289. ரசவாத குளிகன் ஆசான் 
பித்தலாடக வித்தை வினோதன் ::

காற்றடைத்த பையிதில் கல்விகேள்வி கொண்டுமே
தூற்றினைத் துற்றிட தெய்வவுரு — தோற்றிடும்
ஆற்றல் அசது சதுஎனவாய் மாற்றலம்
ஏற்றத்தெம் ஆசான் இறை. 

1290. ஆர்த்தேஷு ஆசு பல:
ஆறாத மால்காதல் பிச்சேறி அன்பினால்
ஈறாக இன்றே திருவடி -- சேர்ந்திடத்
தாருமென வேண்டுவார் தம்வினை முற்றவும்
நீறுசெய் தாட்கொளவாம் பேறு !

1291. முக்குணம் மூன்றதில் ஒன்றினின் ஒன்றி நிற்றல் தவம்:
உள்ளக் குகையில் உருவாகும் எண்ணவலை
கள்ளம் கபடம்என் னாவதும் -- வெள்ள
அணைமதகில் போம்நீர்போல் முக்குணத் தோர்இரண்டில்
பூணிப்போ வற்றாம்பொல் லாப்பு.

1292. ஆத்யம் கலு தர்மசாதனம் சரீரம் :: 

மாயவனார் செய்மண் குடம்தான் உடல்இதில்
வாயு அடைபந்து போல்உயிர் — மேவிட
பொய்கருவி இத்தால் இறைமெய் அதுகாண்பார்க்
குய்உபாயம் உண்டோ பிற? 

1293. நிஷித்தமான சரீரத்துக்கு உபசாரங்கள் அடுக்குமா? 
என்றால் யஜ தேவ பூஜாயாம் ::

மாதவனார் கோயிலிது கண்ணில் ஒளிகூறில்
ஆதவன் வாயின் வழிவயிற்றில் — வேதமுரை
வைச்வா னரஅக்னி கையதில் வேள்வித்காய்
இந்திரன் என்னாம் உடம்பு. 

1294. அகரணே பிரத்யவாய இஷ்டா பூர்தங்கள் :: 

நீத்தார்கள் தேவர் பிராணி மனைதெய்வம்
மத்தும் விருந்து இவர்க்காற்றும் — நித்ய
நியமித்தவாம் நன்நூல் கடப்பாடு காப்பவர்தாம்
வாயும்நல் வித்தாம்வா னோர்க்கு. 

1295. தர்மோ ரக்ஷதி ரக்ஷித :

சத்திரம் சாவடி ஊறுணி ஊண்விடுதி
இத்திறம் யார்சமைப்பார் அத்தனையும் — பூர்த்தங்கள் 
முத்திறம் ஈத்த புகழ்ஈட்டி பொன்றாமே
நித்திலத்து நீடுவாழ் வார்!

1296. முத்திறம் ::
 (ஸாரூப, ஸாமீப்ய ஸமானாகார 
ஆனந்தோ ப்ரஹ்மே திவ்ய ஜானாத்)

இறையோடு ஒன்றாய் அவனினும் வேறாய்
முறைமை உடனாய் உவக்கும் — திறனாம்
பெருநிலை மால்வைகுந் தத்து அடையப்
பெறுவார்க் குளர்எவர் மாறு?

1297. அக்கரை என்னும் அநர்த்தக் கடலில் அழுந்தி  
இளைத்தேற்கு அஞ்சேல் என்று கைகவியாய்!
(எல்லை குறுகும் நாள் அணித்தாக பக்குவத்தாக்கும் மிக்கு)

நல்வினை தீவினை நாலிரண்டும் எஞ்சாமை 
அல்லும் பகலும் அனவரதத் -- தெல்லையும் 
நல்லநின் நாமங்கள் சொல்லியும் நான்தொழ 
செல்வ!நின் தாள்சரணே சால்பு. 

1298. ஆபிமுக்ய மாத்ர அவலம்பித ஆஸ்ரயணம் ::

மூப்பு எனைவந்து ஏய்திடும் போதுஐய!
காப்பெனக்கு கண்ணன் கழல்நீழல் — அல்லால்வான்
வைப்பேதும் தேடாது செய்தவம் இத்தனைக்காய்
உய்த்தென்னை உன்வசம் ஆக்கு. 

1299. புரஞ்சனோபாக்கியானம் :: 

ஒன்பது வாயில் உரோமத்தால்  கூரைவேய் 
சென்னி இதில்ஐந் தலைநாகம் -- மன்னியாள் 
பட்டிணத்து இன்னுயிர் தன்மனது அல்வழிப் 
பட்டிடமால் கிட்டிக் களைந்து. 

1300. மமார்சனம் நார்ஹதி கந்துமன்யதா 
ஸ்ரத்தானுரூபம் பலஹேதுகத்வாத் 
ஸ்ரீமத் பாகவதம் 8-17-17.
(பகவான் விஷ்ணுவை ஆராதித்து வேண்டின  
வரம் வியர்த்தம் ஆவதில்லை)

பயோவிரதம் ஈத்த பலனாய் அதிதிதன்
சேய்எனத் தோன்றி உலகளந்த — மாயன் 
மகாபலியை மாய்க்காது மூவுலகை மீட்டானால்
சாகா வரம்மா லது! 

--  ஆக்கம் மற்றும் படைப்பு 
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.

No comments:

Post a Comment