Sunday, December 14, 2025

ஆசுகவி - பகுதி 13.

 ஆசுகவி - பகுதி 13.

1511. ரதி, மதி, சந்துஷ்டி
(ஈடுபாடு, திருப்தி, சந்தோஷம்)
தாரக, போஷக, போக்கியங்கள்)
உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்.

ஐம்புலன் கண்டவின்பம் மேவும் உயிர்க்கதன்
தம்புலம் ஊன்அதுள் நின்றிட்டு — இன்புறவாம்
ஊண்பல துய்த்து உவகைகொள் போகமதும்
எண்ணில் எமக்கு இறை. 

1512. நான்யப் பஸ்யதி  நான்யத் ச்ருணோதி நான்யத் விஜாநாதி ஸ பூமா!

உராசி  உதிர்பொன்னை ஒத்தி மெழுகால் 
திரட்டுவான் போல் நம்மை படைத்து -- பெருவிழியை   
காட்டி பவளவாய்க் கொண்டு மொழிந்துதன் 
கட்டெழிலால் சுண்டித் திருத்து. 

1513. ஸ்வரூப ரூப விபவ : 
பித்யதே ஹ்ருதய கிரந்தி: சித்யந்தே ஸர்வ சம்ஸயா: 
க்ஷீயந்தே ச அஸ்ய கர்மாணி தஸ்மிந் திருஷ்டே பராவரே ||
இடத்தால் உருவத்தால் காலத்தால் மட்டு 
மடங்கல் இலாஇறைக்கு அஃதியல்பு -- மாடது  
மற்றை அவர்தம் விருப்பால் இறங்கும் 
கொத்தை உருவாய்க் குறைத்து. 

தியாயதோ விஷயாத் பும்ஸ:
ஸங்கஸ்தேஷு உபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம:
காமாத் க்ரோதோபிஜாயதே
க்ரோத்பவதி ஸம்மோக:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி விப்ரம்ஸாத் புத்திநாஸோ
புத்திநாஸாத் பிரணஸ்யதி (கீதா-2-62,63)

செயப்புகில் நன்மை அலதீமை பாபமல
தாயதாம் புன்னியம் என்றதன் — வாயதான
இன்பதன்பு வேண்டாதாய் கைவாங்கல் என்நோன்பு?
மன்னிபயன் மாலுக் கியற்று. 

1514. என்னைத் தீமனம் கெடுத்தாய், மருவித் தொழும் மனமே தந்தாய் உனக்கென் கைமாறு
என்னாது
இன்றென்னை பொருளாக்கி முன்பென்னைப் புறம்போகப் புண்ர்த்ததென்? 
என்னக்கடவதே?

பெருவிடாய் வாய்உலர்த்த தெங்கின் இளநீர் 
தருவரேல், நீர்இதனுள் எங்குற் றதுஎன்றே 
ஆராயப் போமோ? திருவருள் இன்றாக
நேராத நாளுக்கென் தூறு.

1515. ஸம்ஸார ஸாகரம் கோரமநந்த க்லேஶபாஜநம் । த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண: ॥

மாதவன் என்பதோர் தோணி இருந்திட
யாதானும் பற்றி விலகா — தவன்பாதம்
நோகாமல் சேருவ மாகில் மருளொழி 
என்மட நெஞ்சே! முதற்று. 

1516. ந மே பார்த்தாஸ்தி கர்த்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந |
ந அநவாப்தம் அவாப்தவ்யம் வர்தஏவ ச கர்மணி 
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்ரித: |
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வஸ: ||
(பகவத் கீதை 3-22,23).

வரம்தருவார் அவ்வரம்பில் நின்று அருளல்
பரமாய் நரஅரியாய் ராம — கிருட்டினன்
என்றவ தாரம் செயுமதும் நம்போல்வார்க்
கான்ற கடமையுள் ஊன்று. 

1517. மனுஜ நயன விஷயாங்கத உரு தேக: அர்ச்சை:: 

பொறிஐந்தும் தந்தான் சுவைவிரும்பி மாலே!
தூறாத சிற்றின்பம் தூற்றில் — இருப்ப
அருவத் துனைஎங்கனம் நாடுதும்யாம்? அத்தால்
உருஒத்து அர்ச்சைப் படுத்து. 

1518. பகவந் நிக்ரகமும் அனுக்ரகமே!

தான்தனது என்னும் மமதா முதலைஎன்
ஊன்புகுந்தன் நின்ற உயிர்பருக — ஆனைக்கு
உன்அருளை முன்ஈந்த கண்ணறா! என்னையும்
அன்னதே காப்பாய் கனன்று. 

1519. யஸ்ய நிக்ரஹீதாநி ஸர்வஸ இந்த்ரியாணீ 
இந்த்ரியார்த்தேப்ய தஸ்ய ப்ர்ஜ்ஞா ப்ரதிஷ்டிதா || 
கீதை 2-68

முக்குணம் மூன்றதில் மற்றிரண்டு நீகலா
முன்னுற்ற தொன்றே பயற்றுவார் — ஒக்கவே
வானுறையும் தேவரில் வைப்புறுவர் மற்றிரண்டால்
தானவர் என்னே உரைப்பு. 

1520. முயலாமை விலக்கு, முயல்கைக்கு அப்பிரதிசேஷ 
த்யோதகத்திலே நோக்கு. 

ஆர்வம் அனுட்டானம் என்னிரண்டால் கிட்டலாம்
கார்வண்ணக் கண்ணன் கழலிணை, நாம் — சேர்வண்ணம்
எண்ணும் அவன்நினைவு அல்லால் நம்முநற்சி
அண்ணலார் ஈகைக் கிசைவு. 

1521. விதுரான்னாநி புபுஜே ஸுசீசாநி குணவந்தி ச 

அனுமன் செயல்தான் விரும்பிமுன் பஞ்சவர்க்காய்
ஈனச் செயல்என் இராயாது — தானுமோர்
தூது நடந்தான் விதுரர் விரும்பி
அமுதுசெய் விப்ப தறிந்து. 

1522. மந்த்ரம் யத்நேந கோபயேத் ::

ஓட்டைக் குடம்முகவை ஆகாது எத்தனை
போட்டாலும் வாழையின் மட்டை — வீட்டின்
அடுப்பெரிக்க மாட்டாது அதுபோல் கடையர்கு
இட்டகல்வி சல்லடைத்தூர் நீர். 

1523. பிரதம ப்ருவிர்தியாபத்தி ஜன்மோத்பத்தி ::

பிறப்பிடை தோறும் பிறவாமைக் காய
அறம்மறம் என்ற இரண்டின்பால் — நேறும்
உறம்திறம் தாமளித்து இங்கு விடுப்ப
மறுமைவீழ் வார்யார் செயல்?

1524. காந்தஸ்தே புருஷோத்தம பணிபதி சையாசனம் வாகனம் 
வேதாத்மா விககேஸ்வரோ யவனிகா மாயா ஜகன்மோகினி ::

பூதமைந்தும் ஊறுசுவை நாற்றம் ஒலிஒளி 
ஆத இவைதமின் மூத்தமூன்றின்  -- தோற்றுவாய் 
ஆன சடப்பொருள் ஆதிக்காம் மால்தேவி  
தானுமோர் மாய மயக்கு.  

1525. என் உடம்பில் அழுக்கை நானே போக்கேனோ? மாஸுச :
(சேற்றில் விழுந்த மாணிக்கத்தை எடுக்க சேற்றில் குதிப்பாரைப் போலே
ஏற்றம்மிகு வாமனன் நாட்டில் பிறந்து படாதன படுவதும் மனிசர்க்காய்)

மாயமான்பின் சென்று மனையாள் பிரிந்துதான்
மேய பலதுன்பம் போலாவே — சேயன்
எனையும் இருநிலத்து இன்னல் படுத்தும்
அனைத்தும் அவன்விளை யாட்டு. 

1526. சரமோபாய நிர்ணயம் ::
(முடியும் அடியும் தொண்டரான பேறு)


எட்டெழுத்து மந்திரம் கற்றதற்பின் விட்டிடும்
எட்டொன் பதும்விலகப் பெற்றதும் — கிட்டிடும்
என்றதும் தான்தமை ஆசானாய் எண்ணாது
நம்பி எதிராசர்க் கீன்று.

1527. இராமாயனம் ராமாயணம் ::
கௌசிகன் வேள்விதனைக் காத்திட முன் நடந்தாய்; 
தவ்வை என வந்த கைகேசி -- மௌலிதனைத்
வவ்விட கானகம் நீகடந்தாய்; செவ்வேபின் 
வைகுந்தம் மக்களோடு ஏகு !

1528. ஸ்வேச்சயா பரிக்ருஹ்ய அபிமத உரு தேக:  

ஆகாயம் போல்அரசைப் போல்எங்கும் யாதிலும்
மாகாயம் கொண்டு ஆள்கின்ற — ஏகா
அதிபதி எம்பெருமான் நோற்ப பதுமையாம்
கோயிலுள் தெய்வம் குறி.

1529. உபயுக்தேஷு வைஷம்யம்
த்ரிவர்கம் அனபேக்ஷதா
கரணத்ரய ஸாரூப்யம்
இதி சௌக்கிய ரசாயனம்
(ஸ்வாமி வேதாந்த தேசிகர்)

கல்விக் கழகு கடவுளைத் தேடுதல்;
அல்லவை நீத்து உலகிதில் — வெல்வகை சொல்லில் வருமவை ஏற்று உகப்பதும் 
சொல்செயல் எண்ணத் தியைத்து. 

1530. துவம் மாதா ஸர்வ ஜனாநாம்
தேவதேவோ ஹரிப்பிதா ::

இப்பிறவிக் கெம்மையிங்  ஈன்றநற் தாயொடு 
முப்பத்து மூவர் உலகரென --  செப்பிடும் 
யாவர்க்கும் அன்னை அவள்முதல் தெய்வம்போல்   
கோவும் குருவும் விருந்து. 

1531. தேக யாத்திரை கர்மாதீனம்.
ஆத்ம யாத்திரை பகவததீனம். 
பிரபன்னன் கரைந்தானகில் நாத்திகனாம் இத்தனை  
- பகவத் ராமாநுஜர். 

கல்லினுள் தேரைக்கும் தாயின் கருவினில்
ஒல்கு சிசுவுக்கும் சூல்பிடித்த — நெல்லுக்கும்
நல்கிடும் ஈசன்தான் கைகாட்டத் தாழ்திடத்து
செல்கிற்பார் நாத்திகரின் கேடு.  

1532. பிரத்யத்வம்=தனக்கு ஒளிர்வது
பிரகாசத்வம்=தானே ஒளிர்வது
ஆனந்தத்வம்=அனுபவ ஞான பரீவாகம் ஆனந்தத்வம்.

தனக்குத்தான் தன்னால்தான் மிக்கு ஒளிர்வது
ஞானத் துயர்ஆன்மா! தன்னுணர் — பேணான்
மனனுணர் மேவில் பிறவிப் பெரும்துயர்
தானதில் வீழும் வகைத்து.
 
1533. ஜனகோ தேவ: சகல தயாளு
தாம்யத தத்த தயத்வம் ஜனதா
ச்ரேயோ பூயாத ஜனானாம் ::
- சங்கராசார்யர்.

பொறியவை யோடு புலன்பத்தும் செற்று
நெறிபட நிற்றல்கூர் ‘தாமியம்’ — பாரில்
வறிஞன் கொடையாளன் என்னாக ஈத்து
பிறர்பால் இரங்கலுமாம் அஃது.

1534. ஆத்மாவினுடைய தர்மபூத ஞானம் புத்தி.  
மனது அதன் கருவி. அது அதனால் இயக்ப்படுவது இறையின் சக்தி.
அஹமர்த்தத்தின் ஆர்ப்பை துடைத்தால் அடியான் 
என்பது - ஶ்ரீவசனபூஷணம். 
(பிரகார - பிரகாரி அத்வைதம் விசிஷ்டாத்வைதம்)
விக்ரக வழிபாடு ஏன் என்பதற்கான விளக்கம்::

அருவமான ஆன்மாவில் நாரணன் தன்நல்
இருப்பு அருவமான தொன்று; — உருவமான
ஐம்பொருள் காயமிதில் நிற்ப தவன்உரு
எம்பதால் கல்லும் இறை. 

1535. சாதி மாற்ற நிவிர்த்தி சூத்திரம் ::
எக்குற்றவாளர் எதுபிறப்பி ஏதியல்வாக நின்றோர்
அக்குற்றம் அப்பிறப்பு அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே 
- இரா.நூற்.26 
இருந்தபடியே முக்தியாம் ::

அந்தணர்க்கே அன்றி குடிபிறப்பு யாதானும்;
அந்தணரே என்றாலும் முக்கோல்கை — ஏந்து
முனிவர்க்கே அல்லாது மாலடியார் தாள்புகுந்த
ஏனையர்க் குண்டவன் வீடு. 

1536. ஜன்ம கர்மச மே திவயம் யோ வேத்தி தத்வத: 
தியக்த்வா தேஹம் புனர்ஜன்ம ந இதி மாம் ஏதி ::
— கீதை 4-9
அவதார ரஹஸ்ய க்ஞானான் மோக்ஷ:

வினையாட்டி யாம்பிறக்க காலதேசம் நம்கை
தனில்இல்லை; அற்றே பிறந்தபின் — ஆள
வினைப்பயன் உண்ணா தொழியகில்லேம்; கண்ணா!
இனிநீ பிறந்தது தீர்ந்து. 

1537. லக்க்ஷயதி இதி லக்ஷ்மீ :

தளர்வுற்ற எம்மை கருணையம் நோக்கால் 
அளர்வுற்ற இப்பிறவிப் தூறா --தளர்விடுத்து 
மேலை இவர்குறை  நோக்காராய் மாலை 
இயக்குவாள் நம் லக்குமி. 

1538. தேசாந்தர கதனான புத்ரன் பக்கலிலே 
பித்ரு ஹ்ருதயம் கிடக்குமா போலே ::

முடியுடை வானவர் முப்போ திறைஞ்ச
படியினில் பாங்கினில்லாழ் மக்கள் — குடியினை
சேரப் பெறாபெற்ற தாயர்போல் வித்தகம்
நேரா தொழிமால்வான் நின்று!

1539. கண்ணொடு கன்ணிணை நோக்கொக்கின் 
வாய்சொற்கள் என்ன பயனும் இல ::
(அவாகீ அநாதர : ஸதா பஸ்யந்தி ஸூரய :)

அற்பசாரம் அஃதுண்டு இன்புரு வேற்குமால்
நற்றாள் தொழவாற்றால் இவ்வுயிர்வான் — செற்றங்கு
மற்றிண்தோள் மாதுறு மாயனார் கண்வலைக்கு 
உற்றபின் உண்டோ உரை?

1540. பிராதிகூல்ய ரிஷீக திக்காரம் ::
(பகவத்குண அவகாஹனத்தில் சககரியா நின்ற 
நெஞ்சை  திக்தித்தல்)


வீங்கிருள் வையத்து மையல் மிகப்படுத்து 
ஒங்கோத வண்ணர் உணர்வின்றி -- மூங்கில் 
குடிபிறப்பும் முன்னவர் மூதுரையும் எண்ணா 
தடியனேன்வன் நெஞ்சே  அகல் !

1541. என்னைப் பணிகண்டாய் சாமாறே ::

அஞ்சகில்லாய் அன்புடையார் பண்பினை ஆளகில்லாய்
செஞ்சொல் மறையாளர் சீரடி — கொஞ்சிப்
பரவகில்லாய் வஞ்சவென் நெஞ்சே இறைப்போதும்
உன்னோடு வாழேன் இனி. 

இன்றாக நாளையே ஆக அவனடி
சென்றேகல் என்றானும் ஆகவே — பொன்றுவேன்
பொன்றுங்கால் பொன்னரங்கம் மன்னு அரங்க!நீ
அன்றென்னை ஆளக் கருது.
   
1542. தாயை பட்டினியிட்டு ஊரார்க்கு படைத்தல்
அறத்தின் புறத்தே அமையும் ::

சரள தருமம் பலவும் இயற்றி
விரவு திருமால் உணராத — பேர்க்கு
திறக்குமோ வைகுந்த வான்கபாடம்? ஆறலவன்
காரேய் கருணையை விட்டு. 

1543. பேணும் சமயம் பலவதேனும் காணும் 
தத்துவம் கடவுள் வடிவதாம் :: 

நடவு பயத்திடும் ஒர்உழவன் வித்தை
தடமதில் கூடி குவித்திடாது — படியிதில்
வீசி இறைப்பன்போல் பேசு சமயங்கள்
பாரில் பலவுமான தே!

1544. ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கே என்னக் கடவதிறே::

இழவு தவிப்பு நமைஅடைய பாரிப்பு
கேழல் உருமுழு ஞானத் —  தெழில்திரு 
மாலவர்க்கும் உண்டோ எனில்ஆம் அதுவும்தான்
வாலறிவன் மேன்மைக் குறுப்பு. 

1545.  லோகவத்து லீலா கைவல்யம் ::

கடல்மணல் வீடு விளையாட்டாய்க் கட்டி
கடைப்போது அத்தை இடித்து — கெடுக்கும்
பிள்ளையைப் போல படைத்தளித்து நீக்குவான்
வெள்ளவெள்ளத் தெங்கள் இறை.

1546. கரணகளேபரம் கடயிதும் தயமான மந: 

இறைஉணர்வில் ஆழக் குளித்து அவன்சீர்
பொறையூட்டு உண்டு களித்து — இறைப்போது
அன்நின்ற அன்பர் உசாத்துணை யின்இளைப்
பாறஇல் நீர்மைக் கிழவு. 

1547. ஆ மிதித்து கன்று மாய்வதோ ?

நன்மையும் தீமையும் நம்வினை தன்னாலே
என்னில்  நமக்கும்மேல் என்னொருவன் — இன்னருள் 
குன்றவோ? அன்னவர்க்கு நம்அடிமை ஒன்றுமோ?
என்றால் பழுதுநம் பால்.

1548. நாவாயில் உண்டே நமோநா ரணாஎன்று
ஓவா துரைக்கும் உரைஉண்டே - மூவாது 
மாக்கதிக்கண் செல்லும் வகைஉண்டே என்னொருவர் 
தீக்கதிக்கண் செல்லும் திறன் ?
-ழதல் திருவந்தாதி-95

கண்காண வாரானா னேலும் தன்நாமம்
முன்நின்று நம்அபயம் நீடலுமாம் — அன்று
அபலைக்கு ஆடை சுரந்த தறிந்து
சபலராய் செப்பும் இனி.

1549. பாவோ ந அன்யத்ர கச்சதி ::

ஈன்றோள் இருக்கமணை நீராட் டுவரோதான்?
அன்றி முயலிருக்க காக்கைஊன் — தின்னுவாரோ?
என்ற கலியன் வழிபாணன், பட்டரவர்
நின்ற நிலையே நமக்கு!

1550. யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காம ஸங்கல்ப வர்ஜிதா:
ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:
-கீதை 4-19

கீழில் பயன்கருதா செய்செயலும் ஊன்இது
தாழ்த்து உயிரிது வேறென — ஆழ்ந்து
அறிவார் எவர்அவர் ஞானியாம் அன்னவர்க்காம்
பேறும் பயனும் ஒத்து. 

1551. ஆனந்தம் ப்ரஹ்மே திவ்ய க்ஞானாத்

அன்னம் பிராணம் மனம்விஞானம் என்தேடி
முன்னம் பிரமம்தான் ஆனந்து — உன்னல்
அயர்ப்பு ஒருபாடாய் தன்குருவின் தாள்சேர்ந்
தியற்றி அறிவ தெளிது. 

1552. சாங்கேத்யம் பாரிஹாசம் வா  ஸ்தோபம் ஏளனமேவா
வைகுந்த நாமகிரஹணம் அசேஷ: ஹரம் விது:
(ஶ்ரீமத் பாகவதம்-அஜாமிளோபாக்யானம்)

நாரணன்தன் நாமம் நவின்றிட வீயும்நம்
ஈரிலாத வல்வினை முற்றும் - முறிந்து;
கழிவிரக்கம் தோற்ற அனுதபித்தாள் தொண்டர்
உழிதர ஒன்றலாம் வீடு. 

1553. அணு-குலாதய: கோ விசேஷ ?

தம்மக்கள் கூற்றா மிகமிழற்றும் இன்சொற்கள்
அம்மனோர்க்கு இன்பமாரி ஆகல்போல் — என்நாவில்
புன்கவி நம்முடைய மாலுக்கு என்நாளும்
தெம்மாங்கு என்னாக தே!

1554. வேத ப்ரணிஹிதோ தர்ம: தத் விபர்ய: அதர்ம:

மனத்துக்கண் மாசில ராகவற்றால் முன்வினை
தானது போகலுற்று அத்தால் — தனதுயிர்
தன்னை நெறிபடகாண்கிற்பார் இன்பதுன்பம்
தன்னில் துவளார் முடித்து. 

1555. ஜகத் ஸர்வம் சரீரம் தே!
(விஷ்ணுபுராணம்)

ஊன்மேவு உள்ளம் உடல்மேவு உயிர்இவை  
தான்மேவு வீடு வியன்திரு -- மாலுக்கு !
எத்தால் நமக்குடை நாமம் உடற்குமாம்போல் 
அத்தனையு மாம்பிரமம் ஈங்கு.!

1556. தீட்சை பெற்றாலும் தீராத வாசனைகள் ::

ஆனையை ஆற்றில் குளியலிட்டு பேணான்  மினுமினுப்பம் கூட்டி கரைசேர்த்தால் —  ஏனோ
புழுதி தலைக்காக்கும் மாலே! தொழும்ஒருகால்
பின்வீழும் மாசூண் மனம். 

1557. கூப்பீடு கேட்கும் இடம் - காரிய வைகுண்டமாம் திருபாற்கடல் ::

ஏறனை பூவனை வைரவாள் தேவனை
வேறாக ஏத்த அவர்தாம் — திருவனை
மாறாய தானவர்தம் மாற்றழிக்கச் சாற்றுவார்
பேரோதி பாற்கடல் உற்று. 

1558. பஞ்ச யக்ஞ பராயண : 

தண்ணீர்வார் பந்தல்தத் காலத் திலாய்ஊறுணி
எண்ணினார் எக்காலத் துக்குமாம் — புண்ணியம்போல்
மண்ணில் பசிஆர் கனிகாய் மரம்நாட்டல்
விண்ணணை ஐவேள்வி யாம். 

1559. அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாம் ஆண்டாள்
1- பெரியாழ்வருக்கு திருமகளார் அல்லாது சிஷ்யை
2. எம்பெருமான் மெச்சின மஹிஷி
3. எம்பெருமானார்க்கு ஆத்மீய பஹிநி
4. ஆழ்வார்களுள் ஸ்வாபாவிக ஸ்த்ரீத்வ வியக்தி
5. அடியார்களுக்கோ சாட்சாத் க்ஷமா இவாம் கோதா மாதா
என ஐவர்க்குக் காட்டியிட்ட திறன் ஆண்டாளுடையது) :;

அத்தனாசன் சுற்றம் துணைஉடன் கூடினார்
அத்தனை பேரும்ஆண்டாளுக்கு — உற்றார்
எவர்எனக் கேளில் பெரியாழ்வார் பேரரங்கன்
ஆவரெதி ராசரோ டொத்து. 

1560. ஸுவர்க்கம் நரகம் சேணுயர் வீடாகதே
அபவர்க்கம் அஃதே வீடு வீடாமே::

பல்உலகும் பாரும் படைத்து அதில்உறைந்து
எல்லாம் உனக்காக் கியபின்அப் — பொல்லா
நரகும் புகலிடம் ஆகதோ தீயில்
திருந்துபூண்பொன் போலாம் உயிற்கு!

1561. பகவத் பாரிஷத: கணநயகை: த்வாரபாலை: க்ருபயா ஸ்நேக கர்பயா த்ருஷா அவலோகித: ஸம்யக் அபிவந்திதை: 
ஸ்தைரேவ அனுமத: பக்வந்தம் உபேத்ய. . . 
ப்ரணம்ய ஆத்மாநம் பகவதே நிவேதயேத்
(ஶ்ரீவைகுண்ட கத்யம்)
வேதம் வல்லார்களைக் கொண்டு 
விண்ணோர் பெருமான் பதம் பணிந்து ::

செய்யாள் அவள்பரிய செந்தா மரைக்கண்ணன்
செய்யதாள் சேர்வதுவும் அம்மானவன் — வைகுகோயில்
காவல் அவர்கேட்டு நான்மறை யாளர்
அவாவிட்ட குற்றேவல் ஈட்டு. 

1562 பாராத்யம் ஸ்வம் - ஸ்ருதிசிர சித்தம் அத்யாபயந்தி ::

வாய்தநாளும் உண்ணா துறுநோன்பும் ஊரார்க்கு
பொய்யா மழையும் துரிதம்தீர் — ஐயன்பேர்
தையல் பதின்மர் உடன்ஓதி கோவிந்தன்
செய்யதாள் குற்றேவல் ஈட்டு
 
வையமளந்தான் கோயில்வாய் காவல் கடக்கப்போய்
ஐயர் அசோதையும் மூத்தநம்பி —  நப்பின்னை
யாரும் உணர்த்தித்தன் நாயகனை சேர்ந்தமை
கூறும் திருப்பாவை பாட்டு. 

1563. மத நல்லிணக்க மாண்பெருமாள் ::

கைலிப் பெருமாள் இவர்கட்டும் கச்சும்
ஒயிலாக கட்டுவார் இன்னும் — துலுக்கபீபீ
நாச்சியாரும் கட்டுவார், மார்ப்பில் உதைப்பினும்
மெச்சிகால் நோவுதீர் மால்.

1564. கட்கிலி காணுமாறு அருள
அவன் நாமமே நமக்கு ஆறு ::

அருவன் உருவன் பெருமை உரையில்
திருவன் தெரியா மறையப் — பெறினும்
திருமால் திருநாமம் முற்பட காக்கும்
இறையாவான் எங்கள் இறை.

1565. ஸ்வஸ்மை ஸ்வப்ரீயதே காரயதி ::

செயல்மார்கம் சீரிய தாக தமக்குரித்
தாய கடமை அவைஅனைத்தும் — மேயமால்
தம்பொருட்டாய் தான்தம தென்ப தகற்றி
ஓம்பல் அவனுக் குகப்பு. 

1566. திருவுக்கும் திருவான செல்வா! செய்ய கண்ணா!!

மாதுடை மார்பினாய் மாதவா! அஃகுதான
ஏதுவால் தெய்வத் தரசுஎன — வேதியர்
உன்னையே ஓதுவார் ! அத்தேவி உன்னிலாய
நின்னவராம் எம்மில்யார் மிக்கு ?

1567. அபராதட்சாமணம் :: 
(கிருதாந், கிரியமாணாந், கரிஷ்யமாணாந் ச ஸர்வாந் க்ஷமஸ்வ )

போயதான காலங்கள் போகுகின்ற காலங்கள் 
போதறா நின்றவாம் காலங்கள் — தீயபுந்தி
தன்வழி தான்நடந்து மாயும்என் ஆவியை
மாற்றோ வினைகெடமால்! ஏற்று.

1568. ஸர்வஸ்ச ஹ்ருதி ஸந்நிவிஷ்ட: ஶ்ரீநிவாஸ:

ஞானத் துளாய்மால்நீ! ஞான முழுதியாய்
ஆன உயிர்மோனத் உள்ளாய்நீ! — ஆன
படைப்புகள் எல்லாவற் உள்ளாய் இடைவீடு
இன்றியேஎக் காலத்தும் தான்!

1569. கைங்கர்யம்தான் நித்யம்  அத்தை பிரார்தித்தே பெற வேண்டும். 
— ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர்

நமக்கெது நன்மை எனநாம் அறிந்திலமால்
சேம உழவ!நீ அத்தைஏன் — தாமாக
தந்திடாமல் நாமே இரந்து பெறப்பார்ப்பாய்
எந்தமக் கேல்இயல்பாய் நேர்ந்து. 

1570. மாயாந் து ப்ரக்ருதிம் வித்தி மாயிநந் து மஹேஸ்வரம் |

(ஸ்வேதாஷ்வதர உபநிஷத் 4.10)

 

புலன்ஐந்தும் போழ்க்கன் பொறிஐந்தும் சூழ்த்து 

அலமறும் ஆவி அதனின் — விலகிஇத்

தாழ்த்த உடல்நீத்து தன்இயல்பு எய்திடல்

பாழ்த்தவினை பற்றறுத்தாம் அற்று. 


1571. மாமாயன் மாதவன் வைகுந்தன் ::

 

ஆகாயம் போல்அருவம் ஆனமால் அஃதுளாம்

மாகாய அண்ட கடாக  — மாகுவான்

என்ற இரண்டுருவும் தன்னுளே காண்கிற்பார்

நன்கறிவார் நாரணனைத் தான்.


1572. யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வா ஆத்ம ஸுத்தயே||

- பகவத் கீதை 5-11.

 

செயல்செயற் பாடு செயற்காம் பயன்இவை

ஆய எவையும் தனதே — முயற்சி

அலதாய் இகல்ஒழித்து ஆன்ம நலம்பெருகக்

கோலுவதே கொள்கை குறி. 


1573. வேத்ரபாணி விஷ்வக்‌ஷேனர் பிரம்பின் கீழ் பரதந்திரமாய் தன்னை ஆக்கியிடும் தத்துவம் ::

தன்னா ரியன்தனக்கு செய்வதாம் தீப்பொறி

சின்னம் திருமால் அவர்தமக்கு — நன்றுநாம்
என்றும் அடிமை எனுமதுபோல் அன்னார்
அரைதழும்பு நம்கண் அவர்க்கு.

1574. அங்குத்த வாசம் சாதனம். இங்குத்த வாசம் சாத்யம். 
உத்தரோத்தரம் பலீயம் ::

தெய்வத்துள் தெய்வம் திருமால் அவனாகில்
உய்உபாய மந்திரத்துள் மந்திரம் - கைதவமில்
எட்டெழுத்து அஃதா அவன்பள்ளி
கொள்ளரங்கம் 
பட்டிணத்துள் எல்லாம் தலை!

1575. கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தேன விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் ::

அடியார்க் கினிய அடியினை வாயில்
பிடித்து சுவைத்துண்ணல் ஏன்எனக் — கேளில்
அடிகொண்டு அன்றளந்த வையம் வயிற்றில்
முடியதான் வைத்தமைசோ தித்து. 

1576. பக்திஸ்ச நியதா வீர! பாவோ ந அன்யத்ர கச்சதி ::

மோரைக் கடைந்துநல் வெண்ணை திரட்டிடு
வாரைப்போல் மால்பக்தி என்ப — நெறியைப்
பிடித்து அவன்பால்நல் ஞானம் கனிந்தநலம்
கூடி களிப்பதவன் தாட்க்கு. 

1577. பிரணத க்லேச நாசாய கோவிந்தாய நமோ நம:

அன்பர்தம் பாவப் பொதிசுட்டு மாய்ந்திட 
கண்மலர் காட்டியே வேங்கடவன் - நின்றிருக்க
என்உலகீர் வேடர் வலைப்பன்றி போல்நலிவீர்?
சென்றவனை சேவிப்பார் உய்ந்து. 

1578. ஸ்ரேயாம்ஸி பஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி::

வசிட்டன் குறித்த மௌளிபுனை  நாளும்
இசைந்த தயரதன் வாநாள் — நசையும்
தெய்வ விழவும் தவறிலும் ஐயன்மால்
எய்தல் எமக்கேல்என் கூழ்ப்பு?

1579. புள்ளாய் ஓர்ஏனமாய் பக்கிடந்தான் பொன்னடிக் கென்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாய்க் கொள்ளோமே::

அல்லவை நல்லவை செய்பயனாய் ஈன்றஇத்
தொல்பிறவி எல்லையுள் அண்ணல்மால் — ஒல்கி 
கழுகரசாய் உய்ந்வதும் காகமாய் தன்உயிர்
தாழாது வாழலுமாம் இங்கு. 

1580. போக்தா போக்யம் ப்ரேரிதாரம்ச மத்வா ஸர்வம் ப்ரோக்தம் த்ரிவிதம் ப்ரஹ்மமேதத் ||
ஸுவேதாசுவதர உபநிஷதத்தில் (1.12) 

உறுதி விடாமுயற்சி தன்பால் தமக்காம்
திறம்பாத நம்பிக்கை எய்தப்— பெறுமதன்
ஞாளம் தடைதுலங்கி தம்செயல் சாதிக்க
ஊனேய் குரம்பை உயிற்கு. 

[ஜீவாத்மா, ஜட உலகம் மற்றும் இவற்றை இயக்கும் இறைவன் ஆகிய மூன்றையும் தியானித்து, இவை அனைத்தும் ஒரே பிரம்மத்தின் மூன்று பரிமாணங்கள் என்பதை உணரும்போது, ஒருவன் முழுமையான ஞானத்தைப் பெறுகிறான். இதற்கு மேல் அறியப்பட வேண்டியது வேறொன்று மில்லை.]

1581. உபயவேத ஶ்ரீமத்வமே ஶ்ரீவைஷ்ணவத்வம் :: 

மறைநாலும் ஓதி இறையுணர் அந்தணனாம்
ஏறுசீர் ஆகமநூல் பாஞ்ராத்ரம் — தேறுவார் வைட்டணவ னாம்கூறில் ஆழ்வார்ஈ ரத்தமிழ்
பாட்டினார்ஶ்ரீ வைட்டவனா மே!

1582. கர்மம் கைங்கர்யத்திலே புகும் 
க்ஞானம் ஸ்வரூப பிரகாசத்திலே புகும்
பக்தி பிராப்ய ருசியிலே புகும்
பிரபத்தி ஸ்வரூப யாதாத்ம்ய ஞானத்திலே புகும்
பலத்துக்கு அரிய வழியும் எளிய வழியும் கிடக்க அத்தை ஒழிய பகவத் பிரஸாதமே உபாயமாகக் கடவது.
(முமுட்சுப்படி 271-272)

வீடாக்கி நிற்குங்கால் நாம்செய்த கர்மஞானத் 
தூடான பக்தி பிரபத்தி — ஈடாமோ?
நாரணன்தன் நெஞ்சிலூறு ஈரம்தான் காரணமா
ஆரணத்து செப்பு நெறி. 

1583. நல்லமண முள்ளதொன்றை நண்ணிருப்ப தொன்றுக்கு
நல்லமண முண்டாம் நலமதுபோல் 
பூயதே இதி புண்ய :

நாரணனே! உன்னைநான் நம்புகின்றேன் ஆனாலும்
பூரணமாய் நின்னை உணருமாறு — நேரகில்லேன் !
காரணம்நீ  என்னை முழுதுமாய் பாரிப்பக்
கோராதாம் அன்னோ கருத்து?

1584. ஞான விக்ஞாள திருப்தாத்மா கூடஸ்தோ
விஜிதேந்திரியா  யுக்த : யோகீ இத்யுச்சதே 
ஸம லோஷ்டாஸ்மகாஞ்சந:
(பகவத்கீதை 6-8)

யார்இவர் இன்னார் இனையார் இவர்எள
நேர்ந்திடத் தேறில் அறிவெனவும் — பேர்அறிவு
என்னவுமாம் பற்று அதில்வைத்து மற்றதைத் 
தான்துறப்பார் யோகியென்னா வார்!

1585. நீக்கமில் அடியார், 
சயமே அடிமைத் தலைக்கொண்டார்,
கோதிலடியார்.

தலைமகன் ராமனின் தம்பிமார் மூவர்
விலையில் அடிமைக் கிவரவர் — போல
இலையே எனவாம் நிலைநடத்த நாமும்
சாலப் பயிற்றல் தலை. 

1586. தியஜ துர்ஜன ஸம்சர்கம்
பஜ சாது சங்கமம் (கீதை 6-9)

இல்லையுள் தோன்றி வளர்ந்து முதிர்ந்துபின்
அல்லியம் காலத் துதிர்ந்துபின் — இல்லையாம்
வாழ்விதன் எல்லையுள் அல்லார் பிடித்துநும்
தாழாதே நல்லார் இணங்கு

1587. ஆத்மகுணம், ஆசார அநுஷ்டானம், 
பக்தி ரூபாபந்ன ஞானம் மோட்சோப கரணம் ::

தன்னை பிறிதின் தனித்து உணர்த்தவாம்
தன்னின் தனித்தன்மை, சார்ந்ததன் — பின்புலத்
துன்னும் நெறியதில் நின்று இறைஅன்பும்
மின்ன விளங்கான் பிறப்பு. 

1588. பிதா ரக்ஷதி கௌமாரே
பர்த்தா ரக்ஷதி யௌவனே
புத்ரா:  ரக்ஷந்தி வார்தக்யே
ந ஸ்தரீ ஸவாதந்ரியம் அர்ஹதி 

பாலனாய் பண்படுத்த பெற்றோர்; இளமையில்
மேலாணிப் பாசான்; முதுமையில் — ஆலம்பித்
தக்கரை சேர்ந்திட ஆன்ற இறையருளின்
மிக்கது இல்லை உயிற்கு!

1589. வானத்தவர்க்கும் ஈரேழ் உலகத்து 
எல்லா எவர்க்கும் ஈசன் எங்கள் மால்!

நாகத் தணைநாதன் நான்முகற் கீசன்தன் 
யோக சயனத் அடிமுடி -  பாகத் 
அலர்மக ளோடு நிலமகள் ஆள்உலகம் 
மூன்றுடை மால்எம் இறை. 

1590. யார் பிராம்மணன் ? 

அந்தண்மை யாதெனக் கேளில் பிறப்பால்,தன்
முந்தையர் ஓதிய ஓத்துடை — சந்தங்கள்
ஓதி இறையுணர் ஒக்க ஒழுகலோடு
ஆத முதன்மைக் குணம். 

1591. யத்வை மநுரவதத் தத் பேஷஜம் :
(மநு பகவான் சொல்வதெல்லாம் மருந்து)
-தைத்ரிய சம்ஹிதை.
அத்யாபனம் பிரஹ்ம யக்ஞ: 
பித்ரு யக்ஞஸ்ய தர்பணம்
ஹோமோ தெய்வ: பலி பூதௌ
ந்ருயக்ஞ: அதிதி பூஜனம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை.
(வள்ளுவம்)

அறுதொழில் அந்தணர் நால்வேத முத்தீ 
நிறுத்தி மனைமாட்சி மிக்க -- அறத்துளார்  
இல்வாழ்க்கை மேம்பட ஐவேள்வி ஓம்பலால் 
நில்லா துழலும் உலகு.  

1592. பரமபத ஸோபாநம் ::
(மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே)

1. விவேகம் (அர்த்தபஞ்சக ஞானம்)  
2. நிர்வேதம் (பழுதே போயின பலகாலம் என்று கீழ் கழிந்த நாட்களுக்கு வருந்துகை) 
3. விரக்தி (பகவத்விஷய மல்லாதவற்றில் மனக்கசப்பு) 
4. பீதி (கிடைத்த வாய்பை நழுவ விட்டால் வரக்கூடிய அனர்தங்களுக்கு பயப்படுகை) 
5. பிரசாதனம் (சரணாகதியாகிற ஆத்ம நிவேதனம்) 
6. உத்கிரமணம்(சரீர அவஸானே அர்சிஸ் மார்கத்தில் தலைப்படுதல்) 
7. அர்ச்சிராதி (அமானவ ஸ்பர்சத்தோடு விரஜா நீராட்டு வரை பயணிக்கை) 
8. தேசவிசேஷ-பிராப்தி (திருமாமணி மண்டப பிரவேசம்)  
9. பராப்தி (சலோக சாமீப்ய சாரூப ஸாயுஜ்ய சன்மானம்)

அறியவேண்டும் ஐந்தும் பிறந்து கழிந்தநாள்  
ஈறிலின் னாத கனன்று —மாறி
வகுத்த விடத்து உழிதர ஏறவாம் 
போகத் துயர்வைகுந்த  வான்!

1593. தர்சனம் பரபக்திஸ்யாத் பரஞானம் து சங்கம:
புனர் விஸ்லேஷ பீருத்வம் பரமாபக்தி உச்யதே
- சித்தோபாய உபேயம் ச சாதயாமாஸ்ச மாதவம்
. 
புலனைந்தும் நொந்து செயல்நெறியில் நிற்பார்
விலக்காம் இருவினை ஞானத் — துலப்ப
பிரிவில் தரியா தரற்றிறையைக் காண்பார்
செறிவும் திருமால் பரிவு. 

1594. அநுக்ரக மயீம் வந்தே நித்யம் அக்ஞாத நிக்ரகாம் (யதிராஜ ஸப்ததி)
நிக்ரகாத் வாரணம்காலே ஸந்துக்க்ஷணம் அநுக்ரஹே::

ஆமா றறியா சிறுகன் எனைத்தாயே!
காமாறு நீயேஎம் நாவேறி — கூமாறு
செய்துன் அருள்மழை எம்பால் உகுத்தபின்மால்
ஐயன் தகைக்கும் தடிந்து?

1595. ப்ராயம் பாபம் ஸமுத்திஷ்ட: சித்தம் தஸ்ய விசோதனம் 
இத்யேத் பிராயச்சித்தம் உச்யதே.
ப்ராயோ நாம தப: ப்ரோக்தம் சித்தம் நிஸ்சயம் உச்யதே
ப்ராய: தப: தஸ்ய விசோதனம் பாபக்ஷயே சாதனத்வே நிஸ்சிதம். 
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: 
- பிருஹதாரண்யக உபநிஷதத்தில் (4.4.5)

மறைநாலும் முன்ஓதி அல்லா எதிர்மறை
தூறவை யாவும் புறத்திட்டு — மாறிமாறி
அஃதனைத்தும் நெஞ்சிருத்தி ஞானம் வளர்த்திட்டால் 
அஃகாமைக் ஆறாம் அருள். 

1596. பலகறைக்கு விலைபோகும் பரமபதம் ::

நீலநல் நாவல் பழம்கூவி விற்பளாம்
சாலைக் கிழவி ஒருத்திக்கு — கோலநல்
கண்ணன் கரத்ததால் நெல்மணி தூற்றஅவள்
விண்நாடு வேண்டுவளாய் பெற்று. 

1597. த்வஷதன்னம் ந போக்தவ்யம் த்வஷதம் நைவ போஜயேத் ::

அவையில் அவமானம் ஆகும் இடத்து
எவையும் எதிரா இயம்பாது — யாவை
தருமம் எனஐவர்க்கு ஓதியிட்ட பீட்மர்
மருமம் சுயோதனன்வீட் டுப்பு. 

(பரான்ன அஸ்வீகாரம் ஆகார நியமத்தில் சுத்தி ஆனாலும்  
பகவத், பாகவத, பர்த்தா இவர்களுடைய உச்சிஷ்டம் பாவனம்,
ஆச்சார்ய உச்சிஷ்டம் பரமபாவனம் )

1598. ஸத்யம் விதாதும் நிஜ பிருத்ய பாஷிதம் ::

அரக்க குலபாலன் ஆனாலும் நாரணன் 
காரணன் என்னிலுளான் உன்னிலுளான் - ஆரணத்தான் 
இல்லா இடமில்லை என்றசொல் மெய்ப்பிக்க 
வல்லனே கம்பன்தம் பத்து. 

1599. பத்துடை அடியவர்க்கு எளியவன் 
பிறர்களுக்கு அரிய வித்தகன் ::

வேதமோர் நான்கும் உணரஓதி ஆத 
பதினாறில் ஒன்றும் குறையாத  -  சாதன 
சித்த சடங்கர்க்குச் சேயன் அணியனாமே 
பத்துடை அன்பர் திறத்து.  

1600. பிறவி எடுத்தது சாபத்தேலும் வரமாகும் பீஷ்மர், ஜடாயுவைப்போலே;
பிறவி மடுத்தது தவத்ததேலும் பாபமாகும் ராவண கும்பகரணரைப் போலே ::

இருவினை பாபம் கழற்றி இறையோன் ! 
கருணையில் இப்பிறவிச் சாபம் — உருளயிவ்  
ஈனப் பிறவியெனும்  தூறது தீரலாம் 
ஞானம் கனிந்த நலத்து.  

ஸமர்பணம் ::
நாள்தோறும் ஞானம் தழைப்பசீ மாதவன்
தாள்நயந்த சீர்த்தொடை ஆயிரமும் —  கொள்கிற்பார்
அத்தாமத் தன்புதான் மிக்கியற்றும் சீனிவாசர்க் 
குற்றவராம் இங்குமங்கு மே!

--  ஆக்கம், படைப்பு மற்றும் பதிப்புரிமை :
(அகரம்) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.

No comments:

Post a Comment